ITHU NAMMA VEEDU

ITHU NAMMA VEEDU ITHU NAMMA VEEDU is a real estate promoting Channel. We are helping to buy or sell villa,Land,apartment, Commercial Properties and etc..

11/08/2026

“நான் பார்த்த கந்தையா பாஸ்கரன்”

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருந்த ஒரு காலகட்டம்.

அவர்களின் வேதனையையும், போராட்டத்தையும் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் ஒரு பாடலை உருவாக்கினோம்.

“போங்கடா… நாங்கள் பொங்கலடா!”

என்ற அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் திரு. வர்ஷன்.

அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு ஒருநாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அழைத்தவர் அண்ணன் கந்தையா பாஸ்கரன்.

“பாடல் நன்றாக இருக்கிறது… வாழ்த்துகள்!”

அவ்வளவுதான்.

பார்ப்பதற்கு அது ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பாக இருக்கலாம்.

ஆனால், சில தொலைபேசி அழைப்புகள் பேசிவிட்டு முடிந்துவிடுவதில்லை.

அவை வாழ்க்கையின் அடுத்த பக்கத்தைத் திறந்துவிடுகின்றன.

அந்த ஒரு அழைப்பு, பின்னர் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த ஒரு சகோதரத்துவமாக மாறியது.

அறிமுகம் என்பது சில நேரங்களில் ஒரு கதவு

என் தமிழ் சினிமா பயணத்தின் ஆரம்ப காலங்கள்.

பல கனவுகளோடும், பல முயற்சிகளோடும் ஓடிக்கொண்டிருந்த காலம்.

ஒரு புதிய கலைஞனுக்கு திறமை மட்டும் போதாது.

அவனைப் பற்றி யாராவது சொல்ல வேண்டும்.

சரியான மனிதர்களிடம் அவனை அழைத்துச் செல்ல வேண்டும்.

சில கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும்.

அந்தப் பணியை எனக்காகச் செய்தவர்களில் அண்ணன் கந்தையா பாஸ்கரன் முக்கியமானவர்.

பல முக்கியமான இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

என்னுடைய திரைப்படப் பாடல்கள், ஆல்பங்கள் வெளியாகும்போதெல்லாம் அவற்றைப் பற்றிய செய்திகளை சினிமா உலகம், லங்காசிறி உள்ளிட்ட பல ஊடகங்களில் வெளிக்கொண்டு வந்தார்.

அது வெறும் செய்தி வெளியிடுவது மட்டுமல்ல.

ஒரு கலைஞனின் முயற்சிக்கு வெளிச்சம் கொடுப்பது.

அவனுடைய பெயரை இன்னும் சிலரிடம் கொண்டு சேர்ப்பது.

அவன் மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை உருவாகச் செய்வது.

அதைத்தான் அவர் செய்தார்.

“திருமணம் எனும் நிக்காஹ்” திரைப்படத்தின் இயக்குநர் சகோதரர் அனீஸ் அவர்களுடனான எனது அறிமுகத்திற்கும் அவர் ஒரு பாலமாக இருந்தார்.

இன்று திரும்பிப் பார்க்கும்போது புரிகிறது.

ஒரு கலைஞனின் ஆரம்பப் பயணத்தில் கிடைக்கும் ஒரு சிறிய அறிமுகம்கூட, பின்னாளில் மிகப் பெரிய வாய்ப்பாக மாறிவிடலாம்.

எனக்குக் கிடைத்த சில கதவுகளுக்குப் பின்னால் அண்ணன் பாஸ்கரனின் உதவி இருந்தது என்பதை நான் ஒருபோதும் மறக்க முடியாது.



“என் மகனை வைத்து ஒரு படம் செய்கிறேன்…”

காலம் நகர்ந்தது.

ஒருநாள் அவர் தனது மகனை வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கத் தொடங்கினார்.

அப்போது என்னை அன்புடன் அழைத்தார்.

“என் மகனை வைத்து ஒரு திரைப்படம் செய்கிறேன். அந்த நிகழ்வுக்கு நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும். அதில் உங்கள் பாடலும் இருக்க வேண்டும்.”

அந்த அழைப்பு எனக்கு ஒரு சாதாரண அழைப்பாகத் தோன்றவில்லை.

ஒரு கலைஞனாக என்னை அவர் மதிக்கிறார் என்பதன் வெளிப்பாடாகவே அதை உணர்ந்தேன்.

அந்த அன்புக்காகவே நான் ரீச்சா பார்க் சென்றேன்.

என்னுடைய நண்பரும் வகுப்புத்தோழருமான பொத்துவில் பாயிஸ் அவர்களுடன் அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.

அந்த இரண்டு நாட்களும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபவமாக மட்டும் இருக்கவில்லை.

ஒரு மனிதனை நெருக்கமாகப் புரிந்துகொள்ளக் கிடைத்த நாட்களாக அமைந்தன.



ஒரு தொழிலதிபருக்குள் இருந்த இன்னொரு மனிதர்

ரீச்சா பார்க்.

பரந்து விரிந்த இயற்கை.

மரங்கள்.

செடிகள்.

பழங்கள்.

விவசாயம்.

சுற்றுலா.

மனிதர்களின் உழைப்பு.

அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தபோது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் ஒன்று.

அங்கிருந்த மரங்கள், செடிகள், பழங்கள் என ஒவ்வொன்றைப் பற்றியும் பாஸ்கரனுக்கு தெரிந்திருந்தது.

அது வெறும் ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தும் மனிதனின் பார்வையாக எனக்குத் தெரியவில்லை.

தான் உருவாக்கிய ஒன்றை உயிரோடு நேசிக்கும் ஒருவரின் பார்வையாகவே தெரிந்தது.

அங்கு பணியாற்றியவர்களுடன் அவர் பழகிய விதத்தையும் கவனித்தேன்.

அவரைச் சுற்றியிருந்த பலர் அவரை ஒரு முதலாளியாகப் பார்ப்பதைவிட, ஒரு அண்ணனாகவே பார்த்தார்கள் என்பதை உணர முடிந்தது.

அவருடன் நேரில் பழகியவர்களுக்குத்தான் அவருடைய இயல்பை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று அப்போது நினைத்தேன்.

இன்றும் அதே எண்ணம்தான்.



அந்த ஒரு மணி நேரப் பயணம்…

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அந்தத் திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வுக்காக ரீச்சா பார்க்கிலிருந்து நாங்கள் புறப்பட்டோம்.

ஒரு வாகனத்தில் திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட பலரும் பயணம் செய்தோம்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனி வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது பாஸ்கரன் என்னை அழைத்தார்.

“நீங்களும் அவருடன் வாருங்கள்.”

அது ஒரு சிறிய வாக்கியம்.

ஆனால் ஒரு கவிஞனுக்கு அதன் அர்த்தம் மிகப் பெரியது.

அந்த ஏற்பாட்டின் மூலம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஒரு கவிஞனாக எனக்குக் கிடைத்த அந்த நேரமும், அந்த மரியாதையும் என் மனதில் என்றும் நிற்கும்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி சில நேரங்களில் பணமாக இருக்காது.

சரியான மனிதரிடம் நம்மை அறிமுகப்படுத்துவதுதான்.

அந்த உதவியை அண்ணன் பாஸ்கரன் எனக்கு பலமுறை செய்திருக்கிறார்.



ரீச்சா பார்க்… ஒரு இடமல்ல, ஒரு கனவு

இவ்வளவு பெரிய வளாகம்.

இவ்வளவு பரந்த இயற்கை அமைப்பு.

இத்தனை ஆண்டுகளின் உழைப்பு.

இவை எதுவும் ஒரே நாளில் உருவானவை அல்ல.

அதற்குப் பின்னால் எண்ணற்ற உழைப்பு இருந்திருக்க வேண்டும்.

கனவு இருந்திருக்க வேண்டும்.

முதலீடு இருந்திருக்க வேண்டும்.

அர்ப்பணிப்பு இருந்திருக்க வேண்டும்.

அந்த இரண்டு நாட்களில் அவற்றின் சில தடங்களை நான் பார்த்தேன்.

என் பார்வையில் ரீச்சா பார்க் இன்று ஒரு இடம் மட்டுமல்ல.

நாளைய தலைமுறைக்காக உருவாக்கப்பட்ட ஒரு கனவு.

இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இது ஆசியாவின் முக்கியமான சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

வடபுலத்தில், நம் மண்ணில், இத்தகைய ஒரு பெரிய சுற்றுலா மற்றும் இயற்கைத் திட்டத்தை உருவாக்குவது சாதாரணமான விஷயம் அல்ல.

அதற்குக் கனவு வேண்டும்.

அதைவிட அதிகமாக உழைப்பு வேண்டும்.

அதையும் தாண்டி விடாமுயற்சி வேண்டும்.

அந்த மூன்றையும் நான் கந்தையா பாஸ்கரன் அவர்களிடம் பார்த்தேன்.



ஒரு மனிதனைப் புரிந்துகொள்ள…

வாழ்க்கையில் ஒருவரை மதிப்பிடுவதற்கு அவரைப் பற்றிய கருத்துகளை மட்டும் கேட்பது போதாது.

அவருடன் ஒரு நாள் பயணம் செய்ய வேண்டும்.

அவருடன் அமர்ந்து பேச வேண்டும்.

அவருடன் பணியாற்றும் மனிதர்களைப் பார்க்க வேண்டும்.

அவருடைய கனவின் பின்னால் இருக்கும் உழைப்பைப் பார்க்க வேண்டும்.

அப்போதுதான் ஒரு மனிதனை ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும்.

இன்று அவரைப் பற்றி பல்வேறு கருத்துகள் எழுதப்படுகின்றன.

ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வை இருக்கலாம்.

அந்தக் கருத்துகளை மறுக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

ஆனால் நான் பார்த்த உண்மையைச் சொல்லாமல் இருப்பதும் எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை.

எனக்கு உதவிய ஒருவரைப் பற்றி, அவர் ஒரு சிரமமான காலகட்டத்தை எதிர்கொள்ளும்போது நான் மௌனமாக இருப்பது என் மனசாட்சிக்கு சரியாக இருக்காது.

நான் யாருக்காக நிற்கிறேன்?

நான் அவருடைய அரசியலுக்காக நிற்கவில்லை.

அவருடைய பணத்திற்காக நிற்கவில்லை.

எந்தப் பதவிக்காகவும் நிற்கவில்லை.

ஒரு காலத்தில் ஒரு தொலைபேசி அழைப்பில் என்னை வாழ்த்திய மனிதருக்காக…

என் கலைப் பயணத்தின் ஆரம்பத்தில் என்னை பலரிடம் அறிமுகப்படுத்திய மனிதருக்காக…

என் பாடல்களுக்கு ஊடக வெளிச்சம் கொடுத்த மனிதருக்காக…

என்னை ஒரு சகோதரனாக மதித்த மனிதருக்காக…

ஒரு கவிஞனாக எனக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையை வழங்கிய மனிதருக்காக…

ஒரு நன்றியுள்ள மனிதனாக நான் இன்று அவருக்காக நிற்கிறேன்.

அவ்வளவுதான்.

பொத்துவில் அஸ்மின்

29/07/2026
25/07/2026

**அன்று சூரியனை நான் தேடிச் சென்றேன்…
இன்று சூரியன் என்னைத் தேடி வந்திருக்கிறது.**

இலங்கையின் முன்னணி வானொலியான சூரியன் FM, தனது 28-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, சூரியன் FM-இல் அறிவிப்பாளராக வேண்டும் என்ற கனவோடு அதன் வாசலை நேர்முகத் தேர்வுக்காகத் தட்டினேன். அந்த நாள் என் கனவு நிறைவேறவில்லை.

வானொலியைக் காதலித்த நான், பின்னாளில் தொலைக்காட்சியைக் கரம் பிடித்தேன்.

1997 ஆம் ஆண்டு, ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோதே கவிதைகளோடு கைகுலுக்கத் தொடங்கினேன். 2008 முதல் முறைப்படி பாடல்கள் எழுதத் தொடங்கினேன். 2012-ஆம் ஆண்டு வாழ்க்கை என்னை வேறொரு பாதையில் அழைத்துச் சென்றது. அந்தப் பாதை என்னை தமிழ்த் திரையுலகில் ஒரு பாடலாசிரியனாக அடையாளப்படுத்தியது.

இன்று, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே சூரியன் என்னை நேர்காணலுக்காக அழைத்திருக்கிறது.
அன்று சூரியனை நான் தேடிச் சென்றேன்…
இன்று சூரியன் என்னைத் தேடி வந்திருக்கிறது.

என் முதல் திரைப்படமான “நான்” படத்தில் இடம்பெற்ற “தப்பெல்லாம் தப்பையில்லை” என்ற என் முதல் திரைப்படப் பாடலை, இலங்கை ரசிகர்களுக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்திய பெருமை சூரியன் FM-க்கே உரியது.

அதன்பிறகு, என் “ஐயோ சாமி” பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி பாடல்களோடு இணைத்து Top Twenty நிகழ்ச்சியில் ஒலிக்கச் செய்து, என்னை மேலும் பல நேயர்களிடம் கொண்டு சென்றதும் சூரியன்தான்.

இன்று, சூரியன் FM தனது 28-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், “சூரியனே எழுந்துவா” என்ற சூரியன் FM-இன் புதிய நிலையக் குறியீட்டுப் பாடலை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இன்றுமுதல் அந்தப் பாடல் சூரியன் FM-இல் ஒலிக்கத் தொடங்குகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பாளராக வேண்டும் என்று கனவு கண்டவன் நான், இன்று அந்த வானொலியின் அடையாளக் குரலாக என் வரிகள் ஒலிப்பது, இறைவன் எனக்குக் கொடுத்த அரிய பரிசாக கருதுகிறேன்.

ஒரு மனிதனின் பயணத்தில் வெற்றி மட்டுமல்ல; வழிகாட்டிய கரங்களும் மறக்க முடியாதவை.

என் கலைப் பயணத்தில் அழியாத ஒரு தடத்தைப் பதித்திருக்கும் சூரியன் FM-க்கும், அதன் நிர்வாகத்திற்கும், அறிவிப்பாளர்களுக்கும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், உலகெங்கும் வாழும் நேயர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், இனிய 28-வது பிறந்தநாள் நல்வாழ்த்துகளும்!

“அடுத்தவனின் தத்துவத்தைப் பேசிப் பேசி
அடுப்படியில் தூங்காதே.
உலகம் போற்றும்
உனக்கான தத்துவத்தை நீயே பாடி,
உறுதியோடு போரிடுவாய்;
ஒருநாள் வெல்வாய்!”

அன்புடன்,
பொத்துவில் அஸ்மின்

20/07/2026

இலங்கையின் முன்னணி வானொலியான
சூரியன் FM-க்காக
நான் எழுதிய முதல் ஜிங்கிள்

“சூரியனே எழுந்துவா…”

மிக விரைவில் உங்கள் செவிகளில்…

16/07/2026
12/07/2026

“ஹபீபி: கடையநல்லூரிலிருந்து கிழக்கிலங்கை வரை ஒரு பண்பாட்டுப் பாலம்

– பொத்துவில் அஸ்மின் –

தமிழகத்தில் வெளியாகி, இருபத்தைந்து நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய “ஹபீபி” திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு நேற்று எனக்குக் கிடைத்தது.

திரைப்படம் வெளியான முதல்நாளிலிருந்தே அதற்குக் கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும், ரசிகர்களின் பேராதரவும் என் கவனத்தை ஈர்த்திருந்தன. இந்தப் படத்தை நானும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாட்களாக மனதில் இருந்தது. அந்த ஆவல் நேற்று நிறைவேறியது.

இத்திரைப்படத்தின் இலங்கைச் சிறப்புக் காட்சியில் கலந்துகொள்வதற்காக இயக்குநர் மீரா கதிரவன் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்தார். “அவள் பெயர் தமிழரசி”, “விழித்திரு” போன்ற படைப்புகளால் தனித்துவமான இயக்குநராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ள அவருக்கு, “ஹபீபி” அவரது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

தமிழ் திரைப்பட உலகில் நான் பாடலாசிரியராக அறிமுகமாகும் காலத்திற்கு முன்பே இயக்குநர் மீரா கதிரவன் அவர்களுடன் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது. தமிழகத்தில் அவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவையொட்டி நான் எழுதிய இரங்கற்பாடலை முதன்முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டியவர் மீரா கதிரவன். அந்த ஊக்கமும் அன்பும் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன.

இத்திரைப்படத்தின் இலங்கைச் சிறப்புக் காட்சியில் கலந்துகொள்ளுமாறு நண்பரும் இயக்குநருமான மீரா கதிரவன் என்னை அன்புடன் அழைத்திருந்தார். அதேபோல், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் பொத்துவிலில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது என்னை நேரில் அழைத்திருந்தார். நண்பரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முஸாரப்புடன் இணைந்து கல்முனைக்குச் சென்று திரைப்படத்தைப் பார்த்தேன்.

இந்தச் சிறப்புக் காட்சியை முன்னிட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊடக நண்பர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நல்ல திரைப்படம் மக்களை மட்டுமல்ல, மனிதர்களையும் மீண்டும் ஒன்றிணைக்கிறது என்பதை அந்த மாலை எனக்கு உணர்த்தியது.

“ஹபீபி” திரைப்படம் தமிழகத்தின் கடையநல்லூர் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கும் இலங்கையின் தென்கிழக்குக் கரைக்கும் வரலாறு, மொழி, வணிகம், உறவுமுறை, பண்பாடு ஆகியவற்றின் வழியாக நூற்றாண்டுகளைக் கடந்த உறவு இருந்து வந்துள்ளது.

அதனால்தான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது கதை நிகழும் இடங்கள், மக்களின் பேச்சுவழக்கு, உடை, குடும்ப உறவுகள், சமூக வாழ்வு அனைத்தும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை—குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் வாழ்வியலை—என் கண்முன் நிறுத்தின. பல காட்சிகளில் நம் ஊரில் நடந்த சம்பவங்களையே திரையில் காண்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

இந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு நினைவுக்கு வந்தது தேசிய விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் ஜுனைதா ஷரீஃப் அவர்களின் “சாணைக் கூறை” நாவல்தான். கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை, மரபு, பெண்களின் நிலை, சமூக மாற்றத்தின் அவசியம் ஆகியவற்றை ஆழமாகப் பதிவு செய்த அந்த நாவல், இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான சமூக ஆவணங்களில் ஒன்றாகும்.

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாவலை வாசித்தபோது, பல இடங்களில் நான் கண்கலங்கியிருக்கிறேன். அதே உணர்வை “ஹபீபி” திரைப்படமும் மீண்டும் எனக்குள் உயிர்ப்பித்தது. ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதைவிட, ஒரு நல்ல நாவலை வாசிப்பது போன்ற அனுபவத்தை அது அளித்தது. பல காட்சிகள் மனதை ஆழமாகத் தொட்டன; சில காட்சிகள் கண்களைக் கலங்கச் செய்தன. திரை இறங்கிய பின்னரும் அந்தக் கதாபாத்திரங்கள் மனதிலிருந்து அகலவில்லை. அதுவே ஒரு படைப்பின் வெற்றி.

இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய பலம் அதன் நேர்மையான கதைச் சொல்லல். எந்தவித செயற்கையான நாடகத்தனத்திற்கும் இடமளிக்காமல், வாழ்க்கையை வாழ்க்கையாகவே பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன். அதனால்தான் திரையில் தோன்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்குத் தெரிந்த மனிதர்களாகவே உணரப்படுகின்றனர்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பேசும் மொழி, உடை, உடல்மொழி, குடும்ப உறவுகள், அன்றாட வாழ்வியல்—எதுவும் மிகையாகவோ, செயற்கையாகவோ தோன்றவில்லை. ஒரு சமூகத்தின் ஆன்மாவை அதன் இயல்பான வடிவில் பதிவு செய்வதற்கு இயக்குநர் மேற்கொண்டுள்ள ஆய்வும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் பலர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். நடிகர் கஸ்தூரி ராஜா, யூசுப் என்ற பாத்திரத்தில் தனது நீண்டகால அனுபவத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அறிமுக நடிகர்களான ஈஸா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன் ஆகியோரும் தங்களது பாத்திரங்களை முழு நம்பகத்தன்மையுடன் சுமந்திருக்கிறார்கள். துணைக் கதாபாத்திரங்களுக்குக் கூட கதையின் ஓட்டத்தில் தனித்துவமான முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.

இந்தத் திரைப்படத்தின் மற்றுமொரு சிறப்பு ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமியின் காட்சிப்படுத்தலாகும். அவர் பதிவு செய்திருப்பது வெறும் காட்சிகள் அல்ல; ஒவ்வொரு ஃபிரேமும் ஒரு கவிதை, தெருக்கள், வீடுகள், நெசவுக் கூடங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கை—இவை அனைத்தும் பார்வையாளரை அந்த மண்ணுக்குள்ளேயே அழைத்துச் செல்கின்றன. பல காட்சிகளில் ஒளிப்பதிவு பேசுகிறது; வசனங்கள் தேவையில்லாத அளவுக்கு காட்சிகளே உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

ஒரு காலத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மிகவும் பிரபலமாக ஒலித்த “கப்பலுக்குப் போன மச்சான்” என்ற பாடல் திரைப்படத்தில் மிகப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. டி. கே. ராமமூர்த்தியின் இசையில், மறைந்த கவிஞர் நாகூர் சலீம் எழுத, காயல் ஷேக் முகம்மது மற்றும் பி. வசந்தா பாடிய காலத்தால் அழியாத அந்தப் பாடல், திரைப்படத்தின் காலப்பின்னணியையும், அந்தத் தலைமுறையின் வாழ்க்கை நினைவுகளையும் மீண்டும் உயிர்ப்பிக்கிறது. அந்தப் பாடல் ஒலித்த தருணத்தில், ஒரு தலைமுறையின் நினைவுகளே திரையரங்கில் மீண்டும் உயிர்த்தெழுந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், தனது பாடல் இவ்வளவு அழகாக மீண்டும் மக்களிடம் சென்றடைந்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்திருப்பார்.

திரைப்படத்தின் வசனங்கள் இயல்பாகவும் உயிரோட்டமாகவும் அமைந்துள்ளன. கதையாசிரியர் வி. எஸ். முகம்மது அமீன் அவர்கள் வாழ்ந்த மனிதர்களின் மொழியையே வசனங்களாக மாற்றியிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எந்த வசனமும் செயற்கையாகவோ, மேடைப் பேச்சைப் போலவோ தோன்றவில்லை.

இசையமைப்பாளர் சி. சாம்ஸ் திரைப்படத்திற்கு இசையமைத்ததோடு மட்டுமல்லாமல், அதன் உணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கிறார். பின்னணி இசை எந்தக் காட்சியையும் மீறி ஆதிக்கம் செலுத்தாமல், கதையின் உணர்வுகளை மென்மையாகத் தாங்கிச் செல்கிறது. பாடலாசிரியர்கள் யுகபாரதி மற்றும் மஹ்ஷூத் ரஹ்மான் எழுதிய பாடல்களும் திரைப்படத்தின் உணர்வுப் பயணத்தை மேலும் ஆழமாக்குகின்றன. பாடல்கள் வெறும் இடைவேளைக் கூறுகளாக அல்லாமல், கதையை முன்னோக்கி நகர்த்தும் திரைக்கதையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன.

தமிழ் சினிமாவின் நீண்ட வரலாற்றில் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை மிகக் குறைவாகவே உண்மைத்தன்மையுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சில திரைப்படங்களில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பின்னணியில், முஸ்லிம் சமூகத்தின் குடும்ப வாழ்க்கை, கலாச்சாரம், அன்பு, உறவுகள், நம்பிக்கைகள் மற்றும் அன்றாட வாழ்வியலை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல், மிகுந்த மரியாதையுடனும் நேர்மையுடனும் பதிவு செய்திருப்பது “ஹபீபி” திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.

இந்தப் படம் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய ஒரு திரைப்படம் மட்டுமல்ல; மனிதர்களைப் பற்றிய திரைப்படம். அன்பு, குடும்பம், தியாகம், உறவுகள், நினைவுகள், பண்பாடு—இவை அனைத்தையும் இணைக்கும் மனிதநேயப் படைப்பாக இது உருவாகியுள்ளது.

திரைப்படம் நிறைவடைந்தபோது, ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த திருப்தி மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் வாழ்வியலை மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியும் எனக்குள் இருந்தது. அந்த மாலை திரையரங்கில் இருந்த பெரும்பாலானோரின் முகங்களிலும் அதே நிறைவை நான் காண முடிந்தது.

தமிழகத்தில் வெளியான திரைப்படங்களில், முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல், குடும்ப உறவுகள் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை இயல்பாகவும் நெருக்கமாகவும் சித்தரிக்கும் முயற்சிகள் மிகவும் குறைவாகவே இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், இயக்குநர் அனீஸ் இயக்கிய “திருமணம் என்னும் நிக்காஹ்” திரைப்படம், முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலை ஓரளவு திரையில் பதிவு செய்த குறிப்பிடத்தக்க படைப்பாக அமைந்தது.

அதேபோல், இயக்குநர் அனீஸின் மேற்பார்வையில், நடிகை ராதிகாவின் Radaan Mediaworks நிறுவனம் தயாரித்து, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஜமீலா” தொலைக்காட்சித் தொடர், தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவான முதல் தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்றாகக் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது. அந்தத் தொடரில் இசையமைப்பாளர் ரிஸ்வானின் இசையில் இடம்பெற்ற மூன்று பாடல்களை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என் படைப்புப் பயணத்தின் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகும்.

அந்த வரிசையில் பார்க்கும்போது, இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய “ஹபீபி” திரைப்படம், தமிழ்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல், பண்பாடு, குடும்ப உறவுகள், மரபுகள் மற்றும் சமூக உணர்வுகளை முழுமையான திரைப்பட மொழியில் மையப்படுத்திய குறிப்பிடத்தக்க படைப்பாகத் திகழ்கிறது. இந்தப் படம் ஒரு திரைப்படம் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் வாழ்வியலை அதன் இயல்பான நிறங்களுடன் பதிவு செய்திருக்கும் பண்பாட்டு ஆவணமாகவும் விளங்குகிறது.

இன்றைய உலகில் ஒரு சமூகத்தைப் பற்றிய தவறான புரிதல்களை உருவாக்குவதற்கும், அவற்றைத் தகர்ப்பதற்கும் கலை ஒரு வலிமையான ஊடகமாக இருக்கிறது. குறிப்பாக திரைப்படம், இலக்கியத்தைவிட வேகமாக மக்களைச் சென்றடையும் கலை வடிவமாகும். அந்த வகையில், முஸ்லிம் சமூகத்தின் உண்மையான வாழ்க்கை, குடும்ப உறவுகள், பண்பாடு, மரபுகள், மகிழ்ச்சிகள், துயரங்கள் மற்றும் மனிதநேயத்தை மிகுந்த மரியாதையுடனும் உண்மைத்தன்மையுடனும் பதிவு செய்திருப்பது “ஹபீபி” திரைப்படத்தின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்.

இந்தப் படம் முஸ்லிம்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட திரைப்படம் அல்ல. மனித உறவுகளையும், குடும்பப் பாசத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும் மதிக்கும் அனைவருக்குமான திரைப்படம். எந்தவித ஆபாசமோ, தேவையற்ற வன்முறையோ இல்லாமல், குடும்பத்துடன் அமர்ந்து மனநிறைவோடு பார்க்கக்கூடிய அரிதான படைப்பாக இது உருவாகியுள்ளது.

இன்றைய இளம் தலைமுறையினர், தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையும், சமூக மரபுகளையும், பண்பாட்டு வேர்களையும் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. அந்தப் பின்னணியில், “ஹபீபி” போன்ற திரைப்படங்கள் ஒரு தலைமுறையின் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் காட்சிப் பதிவுகளாக மாறுகின்றன. அதனால்தான் இத்தகைய திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டும்; அவை கொண்டாடப்பட வேண்டும்.

தற்போது “ஹபீபி” திரைப்படம் அக்கரைப்பற்று அர்ச்சனா திரையரங்கிலும், பாண்டிருப்பு GK திரையரங்கிலும், கொழும்பு PVR Cinemas, டெமட்டகொட Regal Cinema, யாழ்ப்பாணம் Regal Cinema, திருகோணமலை SAS Plaza, சரஸ்வதி திரையரங்கு உள்ளிட்ட இலங்கையின் பல திரையரங்குகளிலும் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாண மக்களும், இலங்கை முழுவதிலுமுள்ள தமிழ் திரைப்பட ரசிகர்களும் குடும்பத்துடன் சென்று இந்தப் படத்தைத் திரையரங்குகளில் கண்டுகளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நல்ல திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டும். நமது சமூகங்களின் வரலாறு, பண்பாடு, மொழி, மரபு, வாழ்வியல் ஆகியவை கலைப்படைப்புகளின் மூலம் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதுவே ஒரு சமூகத்தின் நினைவுகளைப் பாதுகாக்கும் பணியாகும். அந்தப் பொறுப்பை “ஹபீபி” மிகுந்த நேர்மையுடனும் கலைநயத்துடனும் நிறைவேற்றியிருக்கிறது.

2026 ஆம் ஆண்டின் முக்கியமான தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக “ஹபீபி” நினைவுகூரப்படும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இயக்குநர் மீரா கதிரவன் அவர்களுக்கும், தயாரிப்புக் குழுவினருக்கும், நடிகர்–நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

“ஹபீபி” திரைப்படம், இயக்குநர் மீரா கதிரவனின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக மட்டுமல்லாமல், தமிழ்ச் சினிமாவில் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலை மரியாதையுடனும் உண்மைத்தன்மையுடனும் பதிவு செய்த முக்கியமான படைப்பாகவும் நிலைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

“ஹபீபி” – தவறவிடக் கூடாத திரைப்படம். குடும்பத்துடன் சென்று பாருங்கள். நீங்கள் ஒரு திரைப்படத்தை மட்டுமல்ல, நம் வாழ்வியலின் நினைவுகளையும், நம் பண்பாட்டின் வாசனையையும், மனித உறவுகளின் வெப்பத்தையும் திரையில் உணரப் போகிறீர்கள்.

11/07/2026

அன்பு ரசிகர்களே…

தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடி, ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய “ஹபீபி” திரைப்படம் இன்று முதல் இலங்கையிலும் திரையிடப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் பாண்டிருப்பு GK திரையரங்கிலும் மற்றும் அக்கரைப்பற்று அர்ச்சனா திரையரங்கிலும் திரைப்படம் வெளியாகிறது.

சிறப்புக் காட்சி

📅 11.07.2026 | சனிக்கிழமை
🕕 மாலை 6.00 மணி
📍 GK திரையரங்கம், பாண்டிருப்பு

இந்த சிறப்புக் காட்சியில் இயக்குநர் மீரா கதிரவன் அவர்கள் நேரில் கலந்துகொள்வதுடன், திரைத்துறை, கலைத்துறை சார்ந்த பல முக்கிய கலைஞர்கள், பிரமுகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த இனிய நிகழ்வில் நானும் கலந்து கொள்கிறேன்.

அன்பு ரசிகர்களே…

இன்று மாலை 6.00 மணிக்கு பாண்டிருப்பு GK திரையரங்கில் சந்திப்போம்!

வாருங்கள்…

“ஹபீபி” திரைப்படத்தை திரையரங்கில் ஒன்றாகக் கொண்டாடுவோம்!

07/07/2026

மர்ஹூம் எஸ்.எஸ்.பி. அப்துல் மஜீத் நினைவில் எழுந்த பாடல்: புதல்வர்களை கண்கலங்க வைத்த பொத்துவில் அஸ்மின் மறைந்த ம....

20/06/2026

இலங்கையில் உருவாகும் ‘ராவண மகன்’ – கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

Address

Tamilnadu
Chennai
600080

Website

Alerts

Be the first to know and let us send you an email when ITHU NAMMA VEEDU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ITHU NAMMA VEEDU:

Shortcuts

Share